‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது

சென்னை: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த முறை நாளை முதல் அமலாகிறது. ரயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரயில்வே அமைச்சகம் ‘ரெயில் ஒன்’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரயில்வே துறை மற்றும் ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும். இந்நிலையில் ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

எனவே, ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. தென்னக ரயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: