×

அரங்கனே ஆட்கொண்ட திருப்பாணாழ்வார்

பகுதி 1

“ஆழ்வார்கள் எல்லோருமே அரங்கனுக்கு உசத்திதான். அரங்கன் ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட விதம், நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித்தான் செல்கின்றன. இன்று நாம் காணவிருக்கும் ஆழ்வாரும், ஒரு பெரிய பக்தி மார்க்கத்தையும், எளிமையையும் வழிகாட்டிச் செல்கிறார். இன்று அரங்கனையும், நம் திருப்பாணாழ்வாரையும் எண்ணும் பொழுது, எனக்குக் காவிரியின் நினைவும் வருகிறது.

குடகு தாய்வீடாக இருந்தாலும், தமிழ் நாட்டின்மேல் காவிரிக்கு மிகுந்த பாசமுண்டு, தமிழ் வேதம் சொன்ன ஆழ்வார்கள்மேல் மிகுந்த மதிப்புண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அரங்கன் மேல் உயிரனைய பக்தியுண்டு. விபீஷணன் காலம் தொட்டு, அரங்கனின் பாதம் தொட்டு வணங்கும் பேறு பெற்றவள் காவிரி. அந்தக் காவிரி நதிக்கரையில் அரங்கேறிய அதிசயம் பற்றித்தான் இன்றைய உபந்நியாசம்.

எட்டாம் நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்த கதையிது. சோழ மன்னர்களின் ஆட்சி காலம். உறையூர் நகரில் பாணர்கள் குழுமமாக வசித்து வந்தார்கள். பாணர்கள் என்பவர்கள் பாட்டிசைத்து ஆண்டவனைத் தொழுபவர்கள். கடைசி வர்ணத்தவர் என்று மக்கள் குறிப்பிடுவார்கள். நானும் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன். குலம், சமயம், ஜாதி என தாழ்ச்சி சொல்லல் பாவம் என்பது இன்னமும் புரியாமல் இருப்பவரைப் பார்க்கையில் இப்பொழுதுகூட வேதனையடைவேன்.

அந்தப் பாணர் குலத்தில், கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் உதித்தவர்தான் நம் நாயகர் ‘திருப்பாணர்’. அவருக்குச் சிறு வயதிலிருந்தே அரங்கன்மேல் அப்படியொரு பக்தி. தன்னுடைய யாழை எடுத்து மீட்டியபடி அவர் பாடுவதைக் கேட்க மிகுந்த பரவசமாய் இருக்கும்.தினமும் உதய காலத்தில், காவிரியின் தென் கரையில் நின்றபடி கண்களை மூடி பாடிய வண்ணம் பக்தி செய்வார்.

அவர் பாடலைக் கேட்காமல் வைகறைப் பொழுது விடியாது. அரங்கனும் கேட்டபடி சயனித்திருப்பார். நெகிழ்ந்து, நெக்குருகி அவர் பாடுகையில் அவரை வாரியணைத்து உச்சி முகர வேண்டும் என்று காவிரிக்கு அடிக்கடித் தோன்றும். அப்போழுதெல்லாம் அவரின் காலை காவிரி நனைத்துச் செல்லும். ஆனால், அரங்கனுக்கு அவரைக் கூப்பிட்டு ஒருமுறை தரிசனம் கொடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. இந்த ஏக்கம் பிராட்டிக்கும் இருந்திருக்க வேண்டும். பிராட்டியும் இதுபற்றி அரங்கனிடம் கேட்டதாகத் தகவல் காற்று வாக்கில் வந்ததுண்டு.

பாடலுக்கு இடையே திருப்பாணர் ஒரு நாள் அபூர்வமாகப் பேசினார். பேச்சு என்பதைவிட இறைஞ்சலாகவே அமைந்து போனது. “ அரங்கா! அரங்கா! நான் பிறந்தது ஐந்தாம் வர்ணத்தில். உன் படைப்பில் எந்தக் குறையும் நான் சொல்லவில்லை. என் விதி. அதனாலோ என்னவோ? எனக்கு எப்பொழுதுமே ஒரு தாழ்வுணர்ச்சி. என்னை யாரும் இது வரையில் எதுவும் கூறியது இல்லையென்றாலும் கூட என் மனதில் மாபெரும் தயக்கம். உன் கோவிலுக்குள், அவ்வளவு ஏன், நீ குடிகொண்டிருக்கும் அரங்கமாநகரில் என் கால்கள் பதிக்கக்கூட தகுதியற்றவன் நான் என்பது என் எண்ணம். அப்படியே மனதும் பழகி விட்டது.

ஆனாலும், உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைமட்டும் என் நெஞ்சம் முழுவதும் உண்டு. நீ மிக அழகாக சயனித்திருப்பாயாமே! நீயாகவே விரும்பித்தான் இங்கே பள்ளிகொண்டுள்ளாயாமே! இத்துணை அருகில் நீ இருந்தும் உன்னைத் தரிசிக்க முடியாமல் எது என்னைத் தடுக்கிறது? உன்னை வாழ்நாளில் ஒரு முறை, ஒரே ஒருமுறை தரிசித்தால் போதும். என் வாழ்நாளின் மிகப்பெரிய கனவு, இலட்சியம், குறிக்கோள் என எனக்கு எல்லாமே அது ஒன்றுதான்.

இந்தக் காவிரிக் கரையில் நின்று உன் ஆலய கோபுரத்தைப் பார்த்தபடி பண்ணிசைக்க அருளியிருக்கிறாயே!  குறையொன்றுமில்லை அரங்கா! என்றாவது ஒரு நாள் உன்னைப் பார்க்கும்பொழுது, உன்னை என்னுள் இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொள்வேன். எனக்குப் பண்ணிசைக்க மட்டும் தான் தெரியும். உன்னை அடையும் வழி நீயாகச் சொன்னால் அன்றி எனக்குத் தெரியாது. உன்னிடம் சொல்வதை இதோ இந்த காவிரிக்குச் சொல்கிறேன். காவிரியாற்றின் நீர் உன் பாதங்களைத் தொழும்போது என் உயிரும் அதில் கலந்திருக்கும் என்பதை நீ அறிவாய்.”இப்படியொருவர் உருகியுருகிக் கரைவதைப் பார்க்கையில் காவிரிக்கும் கண்ணீர் பொங்கியது.

அவர் தினமும் வருவதும் தென் கரையில் நின்று பண்ணிசைப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அதே தென்கரைக்கு லோகசாரங்கர் எனும் ஒரு முனிவரும் தினமும் வருவார். ஒல்லியான தேகம், நெற்றியில் பளிச்சிடும் திருமண், கழுத்தில் துளசி மணிமாலை, எப்பொழுதும் வேதம் ஓதியபடியே இருப்பார். அவர் வருகையில் ஒரு பொற்குடம் ஏந்தி வருவார். காவிரியாற்றின் நீருடன் துளசி, நறுமணப் பூக்கள், வாசனைப் பொடி என பொற்குடத்தை நிரப்புவார்.

கிழக்கு நோக்கி அந்தக் குடத்தைக் கையில் ஏந்தியபடி கண்மூடிப் பிரார்த்திப்பார். அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்விக்க அதை அவர் சுமந்துச் செல்வதைப் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கும். மிகுந்த ஆசாரம் உடையவர். அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் முறையாக் கடைபிடிப்பவர். அவருக்கு அதில் கொஞ்சம் கர்வமும் உண்டு. அரங்கன் அவருக்கு மட்டும்தான் அத்யந்தமானவன் என்ற எண்ணமுள்ளவர்.

திருப்பாணரும் லோகசாரங்கரும் பக்தியின் இரு துருவங்கள் என்றே சொல்லலாம்.நீருக்கு என்று ஒரு குணம், எந்தப் பாத்திரத்தில் இருக்கிறதோ அந்த வடிவம்தான் அதன் வடிவம். அதுமட்டுமல்ல. மலர்களைப் போல நீர், நம் பக்தியை நம் பிரார்த்தனையை பகவானிடம் கொண்டு சேர்க்கும். அதனால்தான், மலர்களால் அர்ச்சனையும், நீரால் அபிஷேகமும் செய்து வருகிறோம். காலம்தொட்டு புண்ணிய நதியில் நீராடலும், நீரைக் கொண்டு சடங்குகளும், நியமங்களும் நடந்தேறி வருவதும் வழக்கத்தில் உள்ளது.

காவிரி நீர், திருப்பாணரின் பக்தியையும் லோகசாரங்கரின் அனுஷ்டானத்தையும் அரங்கனுக்கு அருகில் சேர்த்தது. காவிரியின் பிரார்த்தனை அரங்கனைத் தொட்டது. அந்த ஒருநாள் அரங்கனுக்கு விசேஷமாகப் பட்டிருக்கவேண்டும்.அன்றைய வைகறைப் பொழுதில், திருப்பாணர் தென்கரையில் நின்றபடி கண்மூடி வழக்கம்போல் பண்ணிசைத்தபடியிருந்தார். தான் பாடும் பாடலில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார். காவிரிநதியும் அரங்கனின் திருவிளையாடல் நடக்கப் போவதைப் புரிந்ததுபோல் சீராக ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரம், அந்தத் தென்கரையிலேயே, லோகசாரங்கரும் வேதம் ஓதியபடி பொற்குடத்தில் நீர் நிரப்பினார். வழக்கம்போல குடத்தைச் சுமந்தபடி புறப்படத் தயாரானார். அன்றைய தினம், அவர் கண்விழித்த நேரம் முதலே ஒரு இனம் புரியாத படபடப்பு மனதில் தோன்றிய வண்ணம் இருந்தது. அன்று விடியற்காலை அவர் கண்ட கனவு மீண்டும் மீண்டும் மனதில் வந்த வண்ணமிருந்தது. கனவில் அவர் நீர்க்குடத்தைச் சுமந்து சன்னதிக்குள் நுழைய, அரங்கன் முகத்தைத் திருப்பிகொண்டு, சயனித்திருப்பதாகத் தோன்றியது. அரங்கன் தன்மேல் கோபமாயிருப்பதாக உணர்ந்து பதறி விழித்துக்கொண்டார்.

கனவின் பாதிப்பு அவரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.. திருமஞ்சனத்திற்கு நேரமாகிவிட்டது, அரங்கன் காத்திருப்பான் என்ற ஒரு அவசரமும் அவரைத் தொற்றிக்கொண்டது. அனிச்சையாக அவர் தோளில் குடத்தைச் சுமந்தபடி ஒரு அடிதான் வைத்திருப்பார். கால் பிசகி நடையில் ஒரு சிறிய தடுமாற்றம் தோன்றியது. குடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு தாமரை மலர் நழுவியது. அவர் தோளில் விழுந்தது. ஏதோ ஒன்று தன்மேல் ஊர்வதாக எண்ணி பதட்டமானார். அதனால் குடத்தை நழுவவிட்டார். மொத்த நீரும் காவிரி நதியில் கலந்தது. மீண்டும் மந்திரங்கள் உச்சரித்து, குடத்தை நீர் கொண்டு நிரப்பினார்.

திருப்பாணர் கண்கள் மூடி, பண்ணிசைத்தபடி நின்றிருந்தார்.லோகசாரங்கர் குடத்தைச் சுமந்தபடி கரையை நோக்கி அந்தச சிறிய புல்மேட்டின் மீது ஏறினார்.திருப்பாணர் மூடிய கண்களுக்குள் சூரிய ஒளி பட, அந்தச் சிவப்புக்குள் தன்னை மறந்தார்.மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. லோகசாரங்கர் அந்த நொடியில், மழையை விரும்பவில்லை.திருப்பாணர், தன் மீது மழைத்துளி விழ, குதூகலமானார்.

லோகசாரங்கர் முகத்தில் மழைத்துளி விழ கண்களை மூடியபடி இரண்டு அடி எடுத்து வைத்திருப்பார்.
எதிரில் ஒருவர் கண்கள் மூடி நின்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றார்.

‘‘பாதையில் நிற்காதே! நகரு!’’
திருப்பாணரின் உள்ளே பாடல் தொடர்ந்தது.
‘‘என்ன செவிடா? மூடனே, விலகு’’

திருப்பாணருக்குப் பாடலுடன் லேசாக ஆட்டமும் தோன்றியது.அவரின் அங்க அசைவு, லோகசாரங்கருக்கு அவமதிப்பாகப் பட்டது.தான் கண்ட அந்தக்கனவு, குடம் சரிந்ததில் அபசகுணமாகப் பட்ட உணர்வு, த ன் பக்தியைப் பொருட்டாகாக மதிக்காத எதிரே நின்றிருந்த அந்த மனிதன்மேல் திரும்பியது.தன்னை நிந்தித்துக்கொள்வதைத் தவிர்த்து, எதிராளியின்மேல் வசைபாடுவது ஒரு தப்பித்தல். அதைத்தான் லோகசாரங்கர் செய்தார்.

குடத்தைத் தோளில் வைத்துக்கொண்டு, ஒரு கையால் பிடித்தபடி, மற்றொரு கையால் கீழேயிருந்த கல்லை எடுத்தார். எதிரே நின்றிருந்த திருப்பாணர் மீது எறிந்தார். அரங்கனுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திருப்பாணர், ஒரு கல்லடியில் விழித்தார். கல் நெற்றிப்பொட்டில் பட்டு இரத்தம் வடியத் துவங்கியது. இரத்தம் வருவதைக்கூட உணராமல், எதிரே நின்றிருந்தவரைப் பார்த்தார். கைகூப்பி வணங்கினார்.

‘‘எந்த மயக்கத்தில் இருந்தீர்? அரங்கன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வழி விட்டு உந்தன் மயக்கத்தைத் தொடருங்கள்.’’இரைந்து பேசிவிட்டு, எதையோ மறந்தவர்போல ‘ அரங்கா ! அரங்கா! ’ என்று குரல் கொடுத்தபடி கோவிலுக்கு விரைந்தார்.திருப்பாணருக்கு ஏதோ புரிந்தும் புரியாததுபோல இருந்தது. தன் குலப்பிறப்பு காரணமோ என்று எண்ணியபடியே காவிரியாற்றைப் பார்த்தார். அழுகை கண்களிலிருந்து வழிந்து,, நெற்றியிலிருந்து வடியும் இரத்தத்துடன் கலந்தது. ஒரு கலவையான உணர்வுடன் காவிரியில் முங்கினார். காவிரி, வெளி, உள் காயங்களை ஆற்ற முற்பட்டது. திருப்பாணர் மீண்டும் தென்கரையில் நின்று பாடத் துவங்கினார்.

(தொடரும்)

கோதண்டராமன்

Tags : Thirupanazhwar ,Azhwar ,Thirupanazhwar… ,
× RELATED உலகளாவிய மலை வழிபாடு