சென்னை: கமல்ஹாசனின் பெயர் புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியில் பயன்படுத்த சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம் தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தன் அனுமதியின்றி பயன்படுத்தி டி-ஷர்ட்களையும், ஷர்ட்களையும் விற்பனை செய்து வருவதாக கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் ‘நீயே விடை நிறுவனம் மட்டுமல்லாமல் வேறு எந்த நிறுவனமும் தனது பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் தனது அனுமதியின்றி பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஸ்வரா, வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி அனுமதியின்றி வர்த்தக முறையில் கமல்ஹாசன் பெயர், புகைபடங்கள், ஏ.ஐ புகைப்படங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘நீயே விடை’ நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார். அதே போல், கார்ட்டூன்களில் கமல்ஹாசன் படத்தை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். வேறு எவரும் தனது அனுமதியின்றி தனது புகைப்படம், பெயரை பயன்படுத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த உத்தரவு குறித்து தமிழ் ஆங்கிலம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் கமல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
