×

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் புதிய திருச்செந்தூர் சாலையில் தோண்டிய குழிகளால் விபத்து அபாயம்

*விரைந்து மூட பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூர் : நெல்லை- திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து கருங்குளம் வரை சாலையோரம் தோண்டப்பட்ட ராட்சத குழிகளை விரைந்து மூட வேண்டுமென பாதயாத்திரை பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை – திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நெல்லை -திருச்செந்தூர் சாலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் புதிய திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை ஓரமாக குழிகள் தோண்டி கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் பஜார் மற்றும் கார்னர் பகுதிகளில் குழிகள் தோண்டி கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணிகள் நடந்தது. பணி முடிந்ததும் குழிகளை மூடாமல் அப்படியே போட்டுச் சென்று விட்டனர். தற்போது தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று வருகின்றனர். விபத்தை தடுக்கும் விதமாக முருக பக்தர்கள், வாகனங்கள் வரும் திசைக்கு எதிராக செல்கின்றனர்.

இதனால் எதிர்வரும் வாகனங்களும் சாலையில் இருந்து இறங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் சாலையில் கேபிள் பதிப்பதற்கு தோண்டி மூடப்படாமல் உள்ள குழிகளால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

எனவே நெல்லை- திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முருக பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு சாலையோரமாக தோண்டிய குழிகளை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலச்சுவரில் பைப்புகளை அகற்ற வேண்டும்

கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் நடைபாதையில் பஞ்சாயத்துகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் எதிர்முனையில் உள்ள பகுதிகளுக்கு இரும்பு பைப்புகள் அமைத்து கேபிள் கொண்டு சென்றுள்ளனர். இந்த பாலத்தின் கைப்பிடி சுவரில் இரும்பு பைப்புகள் மூலம் எந்தவொரு பாதுகாப்பின்றி கண்ணாடி இழை கேபிள் பதிப்பதற்கு பாலத்திற்கு மேல் பகுதியில் அப்படியே வைத்து சென்றுள்ளனர். இதனால் ஆற்றுப்பாலத்திற்கு கீழ் குளிப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலத்தின் கைப்பிடி சுவரில் வைத்துள்ள பைப்புகள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலத்தின் கைப்பிடி சுவரில் தனியார் நிறுவனத்தினர் வைத்துள்ள இரும்பு பைப்புகளை அகற்றிட வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruchendur road ,Padayatra ,Seruthanganallur ,Nellai-Thiruchendur road ,Karungulam ,Nellai-Thiruchendur ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...