×

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் புதூர்- கானமலை சாலை விரைவில் சீரமைக்கப்படும்

*நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்

கலசபாக்கம் : இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள கான மலை பகுதி கலசபாக்கம் தொகுதிக்குட்பட்டது. இப்பகுதியில் 196 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு போதிய சாலை வசதிகள் கிடையாது. இதனால் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள புதூர் கிராமத்தில் இருந்து கானமலை செல்ல வேண்டும் எனில் காட்டுப்பகுதி குன்றுகளை கடந்து தான் செல்ல வேண்டும். புதூர் கிராமத்திலிருந்து கானமலையில் உள்ள மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதனால் கானமலையில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை அமைச்சர் எ.வ.வேலுவிடம், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வலியுறுத்தினார். அதன்பேரில் கடந்த 2023ம் ஆண்டு ரேஷன் கடை திறக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் மலை அடிவாரத்தில் உள்ள புதூர் கிராமத்திலிருந்து, கான மலை செல்ல போக்குவரத்து வசதிக்கு சாத்தியக்கூறு கிடையாது. சுமார் 10 கிலோமீட்டர் பைக்கில் தான் செல்ல வேண்டும்.

அல்லது நடந்து செல்ல வேண்டும். ஆபத்தான கரடு முரடான பாதைகளை கடந்து பைக்கில் தான் தற்போது மலைவாழ் மக்கள் சென்று வருகின்றனர். இதனால் புதூர்-கான மலை சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணனிடம் கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில், புதூர் கிராமத்தில் இருந்து கான மலை வரை பைக்கிலும், நடந்தும் சென்று எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் எ.வ.வேலுவிடம், சாலையின் தற்போதைய நிலை குறித்து தகவல் தெரிவித்து, விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதற்குள் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விரைவில் சாலையை சமம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு மலைவாழ் மக்களுக்காக சாலை வசதி ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்தாலும், வனத்துறையின் அனுமதி பெற்று தான் பணிகள் தொடங்க முடியும். எனவே ஒன்றிய அரசு தலையிட்டு, சாலை பணிகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Budur-Kanamalai road ,Jawwatumalai Union ,MLA ,Galasapakkam ,Kana hill ,Javwatumalai Union ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...