×

திருத்தணி அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றம்

திருத்தணி: தினகரன் செய்தி எதிரொலியால் திருத்தணி அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. திருத்தணி அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு, தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் பழைய கட்டிடம் முறையான பராமரிப்பின்றி தூய்மையற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக, பழைய கட்டிடத்தில் நுழைவாயில் பகுதி முதல் வளாகம் முழுவதும் ஆடு மாடுகள் ஆக்கிரமித்து அசுத்தம் செய்வதாலும், தினமும் தூய்மைப்படுத்தாமல் விடப்பட்டுள்ளதால், மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்களில் இருந்து காய்ந்து உதிர்ந்த இலைகள் பிளாஸ்டிக் கவர்கள், குப்பை தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் காத்திருக்கவும், அமர்ந்து உணவு அருந்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை சுகாதாரம் உறுதிப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி எதிரொலியாக உடனடியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் பழைய மருத்துவமனை கட்டிடத்தின் வெளிப்புற பகுதி மற்றும் உள்புறத்தில் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதனால், நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Thiruthani Government ,Thiruthani ,Trithani Government Hospital ,Dhinakaran ,Thiruthani Government Hospital ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இயங்கும்...