சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாட பட உள்ள நிலையில் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக தன மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்ற ஏராளமான பயணிகள் டிக்கெட் கட்டண விலை பல மடங்கு உயர்ந்துள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.1800 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.4200 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கோவைக்கு அதிகபட்சமாக ரூ.3000ம். மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.3500. நாகர்கோவிலுக்கு ரூ.4200ம், திருச்சிக்கு ரூ.3000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டான உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக்கால கட்டண முரண்பாடுகளை களைய அரசு ஆம்னி பேருந்துக்கு குறைந்த பட்ச கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம் விதித்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
