திருவண்ணாமலை, ஜன.12: புதுச்சேரியை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் உலக நன்மை வேண்டி பரதநாட்டியம் ஆடியபடி 14 கிமீ தூரம் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகும். இங்கு, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இறைவனே மலை வடிவாக இங்கு காட்சியளிப்பதால், மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தையும் பக்தர்கள் நடந்து சென்று வழிபடுகின்றனர். தீவிர பக்தியுடைய சில பக்தர்கள், அடி பிரதட்சணமாகவும், அங்க பிரதட்சணமாகவும் கிரிவலம் செல்வதும் உண்டு.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த பரத நாட்டியம் கற்கும் பள்ளி மாணவிகள் 70க்கும் மேற்பட்டோர் பரதநாட்டியம் ஆடியபடி திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபட்டனர். பரதநாட்டியத்திற்கு தகுந்த இசை பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடியபடி நடன கலைஞர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், சிவனடியார்கள் பலரும் பக்தி பாடல்களை பாடியபடி கிரிவலத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து, நாட்டிய பள்ளி மாணவியின் தரப்பில் கூறுகையில், உலக நன்மை வேண்டி பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றதாக தெரிவித்தனர்.
