திருச்சி, ஜன. 12: தமிழ்நாடு முதலமைச்சா் ‘உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 18 ஆயிரத்து 985 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி சார்பில் இயற்றப்பட்ட பொங்கல் பாடலை வெளியிட்டு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 40 மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகளை வழங்கி பேசுகையில்,
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மாணவர்களுக்கு இந்த உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.இதில், மாவட்ட கலெக்டர் சரவணன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், கலை காவிரி நுண்கலை கல்லூரி இயக்குனர் செயலா் லூயிஸ்பிரிட்டோ, முதல்வா் உமாமகேஸ்வாி, ஆசிரியா்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
