கரூர், ஜன.12: கரூர் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 236 பயனாளிகளுக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 10.78 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கிய பின்னர் தெரிவித்தாவது,
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் மூலம் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கவும் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். பாரம்பரியக் கலைகளை அழியாமல் பாதுகாத்தல், கைவினைஞர்களுக்குத் தேவையான நிதி உதவி மற்றும் நவீன உபகரணங்களை வழங்குதல். அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குச் சரியான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதே ஆகும். கைவினைஞர்கள் தங்களின் தொழிலை விரிவுபடுத்த குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. கடினமான உடல் உழைப்பைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்க நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகின்றன. புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர பயிற்சிகளும் தமிழ்நாடு அரசால் அளிக்கப்படுகின்றன.
பூம்புகார் போன்ற அரசு விற்பனை நிலையங்கள் மூலம் கைவினைஞர்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரியக் கைவினைஞர்கள். மண்பாண்டம் செய்தல், சிற்பம் வடித்தல், நெசவுத் தொழில், மரவேலைப்பாடுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்பவர்கள் , இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பொழுது தமிழ்நாடு அரசின் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டில் 236 நபர்களுக்கு ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அரசின் இதர நலத்திட்டங்களையும் எளிதாகப் பெற முடியும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற அல்லது விண்ணப்பிக்க, கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகலாமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 10.78 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ முன்னிலையில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், ஜவுளி ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கம் தலைவர் அன்பொழி காளியப்பன், இயக்குநர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக பயிற்சி நிலையம் திவ்யா, உதவி பொது மேலாளர், வங்கியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் தகவல்
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் மூலம் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கவும் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும்.
