சென்னை: வடசென்னை வடக்கு மாவட்ட சார்பில் நேற்று மாலை வியாசர்பாடியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பிர் ஆர்.டி.சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் 3500 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடும் விழா என்றால் பொங்கல் விழா தான். உழைப்புக்கு மரியாதை செய்யும் விழா, விவசாயிகளுக்கு மரியாதை செய்யும் விழா பொங்கல் விழா.2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை, முதல்வர் மீண்டும் செயல்படுத்தியுள்ளார்.
வடசென்னை வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை உருவாக்கி அதன் கீழ் 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.சிறந்த செயல்பாடுகளை அரசு மேற்கொள்வதால் தான் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை வெளிமாநில முதல்வர்கள் வந்து பார்த்து அதை தங்களது மாநிலத்தில் செயல்படுத்த போவதாக கூறி வருகின்றனர்.
இந்தியாவிலேயே பாசிச சக்திகளுக்கு எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய முதல்வராக நம் முதல்வர் இருந்து வருகிறார். பாசிச பாஜவினர் தொடர்ந்து இனி தமிழகத்திற்கு வருவார்கள் தேர்தல் வருவதால். அமித்ஷா அவர்கள் எங்களது அடுத்த டார்கெட் தமிழ்நாடு என கூறியுள்ளார் யார் வேண்டுமானாலும் இலக்கு வைக்கலாம். ஆனால் தேர்தல் வந்தால் மக்களுடைய அன்பை பெற்று வென்று காட்டப்போவது திராவிட முன்னேற்றக் கழகம் தான். பழைய அடிமைகள் பதிய அடிமைகளோடு சேர்ந்து வருவார்கள் அவர்களையெல்லாம் களத்தில் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
எப்போதும் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும் பொழுது பயந்து முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்வார், இந்த முறை அவர் செல்வது அம்பலப்பட்டு விட்டதால் முகத்தை மறைக்காமல் டெல்லி சென்றுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக நமது வாக்குரிமையை பறித்தது, திமுகவினர் தங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் நமது ஆட்சி தான் அமைய வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக 2வது முறையாக நம் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கழக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர் ஐரீம்ஸ் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா, கருணாநிதி. நிர்வாகிகள் கமலக்கண்ணன், நரேந்தர், வேதா, பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன், வட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் கலநது கொண்டனர்.
