மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்: திருப்பதியில் இஸ்ரோ தலைவர் பேட்டி

 

திருமலை: பிஎஸ்எல்வி-சி 62 ராக்கெட் நாளை மறுநாள் (12ம்தேதி) காலை 10.17 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 12ம்தேதி காலை 10.17 மணிக்கு பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-என்1 செயற்கைக்கோளும், அத்துடன் 15 கூடுதல் செயற்கைக்கோள்களும் ஹரிகோட்டாவில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டின் (2026) முதல் ராக்கெட்டாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் 8 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு செயற்கைக்கோள்களாகும். இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் நமது ராக்கெட்டில் அனுப்புவது நம் நாட்டிற்கு கிடைக்கும் பெருமையாகும். மனிதர்களுடன் விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2027ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்னோட்டமாக 3 ராக்கெட்டுகள் ஆட்கள் இன்றி இந்த ஆண்டு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: