கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்: 8,456 பேருக்கு பரிசுத்தொகுப்புகளை வழங்கினார்

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.  அதன்படி, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று காலை பிரமாண்டமாக நடந்த திராவிட பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து முதல்வர் மற்றும் அவரது மனைவிக்கு பொங்கல் பரிமாறினர். அங்கிருந்த சுமார் 800 பேருக்கு முதல்வர் பொங்கல் பரிசு பரிசுகளை வழங்கினார். பின்னர், விழாவில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு காளை மாட்டை பார்வையிட்டார். தொடர்ந்து, பெரம்பூர் பல்லவன் சாலையில் அமைந்துள்ள டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 3000 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, அதே பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் சுமார் 3500 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட்டு அங்கிருந்து கிளம்பும்போது அங்கிருந்த ஏராளமான பெண்கள் தங்களது செல்போனில் முதல்வர் மற்றும் அவரது மனைவியுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார்.

பொறுமையாக நின்று ஒவ்வொரு குழுவினருடனும் முதல்வர் செல்பி எடுத்துக் கொண்டனர். சிலம்பம் சுற்றிய முதல்வர்: கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி செல்லும் வழியில், பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் வகையில் சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.

அப்போது காரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழே இறங்கி, சிலம்ப வீரர்களோடு சேர்ந்து சிலம்பம் சுற்றினார். இதனை அங்கிருந்துவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற் கல்லூரி வளாகத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மண்டலம் 5 மற்றும் 6ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 1300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் தொகுப்புகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ், குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: