சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும், முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னி குயிக். அவரது நினைவைப் போற்றும் வகையில், தேனி மாவட்டம் கூடலூரில், பென்னி குயிக் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் பிறந்த கேம்பர்லீ நகரத்தில், தமிழக அரசு சார்பில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கலாச்சார இணைப்புத் திட்டத்தின்கீழ், மதுரை மற்றும் கேம்பர்லீ நகரங்களைக் கொண்டுவர, தமிழக அரசு முடிவுசெய்தது. அந்தவகையில், இரு நகரங்களுக்கும் இடையேயான கலாச்சார இணைப்பு ஒப்பந்தம் வருகிற பொங்கல் திருநாளில், மதுரையில் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இங்கிலாந்து சர்ரே ஹீத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரி, 5 நாட்கள் பயணமாக, சென்னை வந்தார்.
அப்போது சர்ரே ஹீத் மாகாண மேயர் லூயிஸ் ஆஷ்பெரி கூறியதாவது: கேம்பர்லீ- மதுரை இரு நகரங்களுக்கு இடையே, இணைப்பது வரலாற்று ரீதியான தொடர்பை புதுப்பிப்பதுடன், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும். கலாச்சார பரிமாற்றம், தொழில் முதலீடுகள், கல்வி போன்ற அம்சங்களை மேம்படுத்தும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட உள்ளோம். பென்னி குயிக் என்ற மாமனிதருக்கு, நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். 100 ஆண்டுகள் கடந்தும், மதுரை மக்கள் பென்னி குவீக்கை மதிப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
