தாலியை கழற்றும்படி கெடுபிடி, தகாத வார்த்தை பேசுவதாக குற்றச்சாட்டு: சுங்க அதிகாரிகள் பயணிகளை பரிசோதிக்க சட்டையில் அணியும் நவீன கேமரா வசதி

* சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முறை அமல்

சென்னை: சுங்கச்சோதனையின் போது அதிகாரிகள் விமானப் பயணிகளிடம் தாலியை கழற்றும்படி கெடுபிடி செய்வது, தகாத வார்த்தைகளால் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாடி ஒர்ன் கேமரா அணிந்து சுங்கச்சோதனை நடத்தும் புதிய முறை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் வந்துள்ள இந்த புதிய முறை படிப்படியாக திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில், பெங்களூருக்கு அடுத்ததாக, சென்னையில் அறிமுகம் ஆகியுள்ள இந்த திட்டம் அடுத்து ஐதராபாத், விஜயவாடா, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகள் ஆகியோருக்கு, சுங்கச் சோதனை மிகவும் முக்கியமான ஒன்று.

அதேபோல், சுங்கச் சோதனைகள் நடக்கும் போது, பயணிகளிடம் சோதனை நடத்தும் சுங்க அதிகாரிகள், கண்ணியமான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் சுங்கத்துறைக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் சுங்கச் சோதனையின் போது, அதிகாரிகள் கெடுபிடி செய்வதோடு, தாலியை கழட்டும்படி கூறினர். தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்று பரவலாக சில விமான நிலையங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் விமான நிலையங்களில், சுங்கச் சோதனை செய்யும் அதிகாரிகள், பயணிகளை சோதனை நடத்தும் பணியின் போது, நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட “பாடி ஒர்ன் கேமராவை” சுங்க அதிகாரிகள் சர்ட் பாக்கெட் அருகே மாட்டி இருக்க வேண்டும். அந்த கேமரா சுங்க அதிகாரிகள், சோதனைகள் நடத்துவதை, வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யும். அந்த கேமரா காட்சிகள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு சேமித்து வைக்கப்படும்.

ங்கச் சோதனையின்போது ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார்கள் அல்லது சந்தேகங்கள் உயர் சுங்க அதிகாரிகளுக்கு வந்தால் அப்போது உயர் சுங்கத்துறை அதிகாரிகள், இந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சுங்கச் சோதனையின் போது, பணியில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள், பாடி ஒர்ன் கேமரா (Body Worn Camera) தென்னிந்தியாவில் முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது, சென்னை விமான நிலைய சுங்கத்துறையிலும் அமலுக்கு வந்துள்ளது. அடுத்ததாக ஐதராபாத், கொச்சி விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறத. சென்னை விமான நிலையத்தில், இதற்காக தற்போது முதற்கட்டமாக 8 கேமராக்களை இந்திய நிதி அமைச்சகம், சுங்கத்துறைக்கு வழங்கி உள்ளது. ஆனால் இது போதுமானது இல்லை என்பதால், மேலும் 24 கேமராக்கள், அதிக விரைவில், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதிகளில் சுங்கச் சோதனை பிரிவில், கிரீன் சேனல் ரெட் சேனல் என்று இரண்டு வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளில் பயணிகளை சோதனை செய்யும் பணியில் இருக்கும், சுங்கத்துறையினர் இந்த கேமராவை தங்களுடைய சர்ட்டில் மாட்டி இருப்பார்கள். அவர்கள் பயணிகளை நிறுத்தி விசாரிப்பது, சோதனை நடத்துவது உள்ளிட்டவைகள் அனைத்தும் கேமராவில் வீடியோ மற்றும் ஆடியோவுடன் பதிவாகும். அதோடு அந்தக் காட்சிகள் சுங்கத்துறை கம்ப்யூட்டர்களிலும் சேவ் ஆகும்.

அதன்பின்பு சுங்கச் சோதனைகள் குறித்து, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் ஏதாவது ஏற்பட்டால் அந்த நேரத்தில் இந்த கேமராவில் பதிவாகிய காட்சிகளை சுங்கத்துறை உயர் அதிகாரிகள், முறைப்படி ஆய்வு செய்து, சுங்கச் சோதனையின் போது நடந்தது என்ன என்று முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் பயணி ஒருவர் சுங்கத்துறையில், எனது தாலியை கழட்டும்படி கூறினர் என்று புகார் தெரிவித்து, அது பெரும் சர்ச்சை ஆனது.

ஆனால் அதுகுறித்து விசாரணையின் முடிவில், அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்று தெளிவாகியது. எனவே அவ்வாறு சர்ச்சையான சம்பவங்களின் போது, விசாரணைக்காக, இதுபோன்ற கேமரா காட்சிகளை இந்திய நிதி அமைச்சகம், சர்வதேச விமான நிலையங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் தற்போது சென்னை விமான நிலையத்தில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற சர்வதேச விமான நிலையமான திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

* சிறப்பான திட்டம்
பாடி ஒர்ன் கேமரா சோதனை குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சுங்கச் சோதனையின் போது, கேமரா அணிந்திருக்க வேண்டும் என்ற திட்டம் சிறப்பான ஒரு திட்டம். அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு சோதனை நடத்தும்போது அதனால் பயணிகள் பாதிக்கப்பட்டால் அவர்களில் சிலர் சுங்கத்துறையின் மீது தவறான, உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவிடுகின்றனர். ஆனால் இந்த கேமரா சிஸ்டம் செயல்படுத்துவதன் காரணமாக, அதுபோன்ற நிலை ஏற்படாது’’ என்றனர்.

* செயல்பாட்டில் இருக்க வேண்டும்
சர்வதேச விமான பயணிகள் தரப்பில், ‘‘இந்த திட்டம் சிறப்பான ஒரு திட்டம். இதனால் சோதனை நடத்தும் அதிகாரிகள், நேர்மையாக செயல்பட வழி வகுக்கும். அதே நேரத்தில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, சில காலங்களில் காணாமல் போய்விடுகிறது. அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றனர்.

Related Stories: