இளையோர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:

திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டி சென்னை துறைமுகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பல்வேறு வகையிலான பாய்மர படகுப்போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, சீசெல்ஸ், மொரீசியஸ், மலேசியா, அயர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 87 படகோட்டும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகளில் இந்திய அணி 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. அயர்லாந்து 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்களையும், மலேசியா 1 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.  போட்டியில் தமிழ்நாட்டு வீரர் கிருஷ்ணா வெங்கடாசலம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை நேத்ரா, வீரர்கள் வருண் மற்றும் கணபதி ஆகிய மூன்று பேரும் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்கள். இவர்கள் மூவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னையில் நேற்று நிகழ்ச்சியில், இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ேநற்று பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, தமிழ்நாடு பாய்மர படகு சங்கத்தின் துணைத் தலைவர் அசோக் தாக்கர் உள்பட பாய்மரப் படகு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: