சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது. இந்த நாளில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் ஆகியவற்றின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும். அறிவிப்பை மீறி மது விற்பனை செய்தால், மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
