நியூயார்க்: நோபல் அமைதி பரிசை பெறுவதற்கு என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமை பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா எண்ணெய் வளங்கள் குறித்த திட்டங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த ஆண்டு நடந்த மோதலில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘மக்கள் டிரம்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் எட்டு பெரிய போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். சில 36 ஆண்டுகள், சில 32 ஆண்டுகள், 31 ஆண்டுகள், 28 ஆண்டுகள் , 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தன. இந்தியா -பாகிஸ்தான் போன்ற சில போர்கள் தொடங்குவதற்கு தயாராக இருந்தன. அங்கு ஏற்கனவே 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பதவியேற்ற 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன். 2009ல் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஒபாமா எதுவும் செய்யாமலேயே நோபல் அமைதி பரிசை பெற்றார். வரலாற்றில் என்னைவிட வேறு யாருக்கும் நோபல் பரிசுக்கு அதிகத் தகுதி இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.
நான் தற்பெருமை பேச விரும்பவில்லை. ஆனால் வேறு யாரும் போர்களை முடிவுக்கு கொண்டுவரவில்லை. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அது ஏன் என்று அவருக்கே தெரியாது. இப்போதும் நோபல் பரிசு ஏன் கிடைத்தது என்பது அவருக்கு தெரியது. அவர் சுற்றித் திரிகிறார். அவர் ஒரு மோசமான அதிபராக இருந்தார்.
