குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை: பலியானவரை விமர்சித்த டிரம்பால் பரபரப்பு

 

மின்னியாபோலிஸ்: அமெரிக்காவில் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், பலியான பெண் மீது பழி சுமத்தி அதிகாரியைப் பாதுகாத்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கடந்த 7ம் தேதி குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, காரில் இருந்த ரெனீ நிக்கோல் குட் (37) என்ற பெண், அங்கிருந்த அதிகாரிகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 குழந்தைகளுக்குத் தாயான அவர், மிக அருகில் வைத்துச் சுடப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எப்பிஐ மற்றும் மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அதிகாரிகளிடமிருந்து விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்துப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘உயிரிழந்த பெண் மிக மோசமாக நடந்து கொண்டார்; அவர் அதிகாரியை வாகனத்தால் மோதிக் கொல்ல முயன்றதால் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார். மேலும், தனது கூற்றை நிரூபிக்க அவர் பத்திரிகையாளர்களிடம் வீடியோ ஒன்றை காட்டினார்.

ஆனால், அந்த வீடியோவில் கார் அதிகாரிகளை விட்டு விலகிச் செல்வதையும், அந்தச் சமயத்தில் அதிகாரிகள் சுடுவதையுமே காட்டுவதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டிரம்பின் இந்தக் கருத்துக்கு மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘இது வெறும் பிரசாரம்’ என்றும், தற்காப்பு வாதம் என்பது குப்பை’ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Related Stories: