பலத்த பாதுகாப்பு நிறைந்த அயோத்தி ராமர் கோயிலுக்குள் தொழுகை நடத்த முயற்சி: காஷ்மீர் நபர் அதிரடி கைது

அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். இதே போல் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோயில் வளாகத்திற்குள் நுழைந்து, சன்னதியைத் தரிசித்த பிறகு, சீதா ரசோய் பகுதிக்கு அருகில் அமர்ந்து ஒரு நபர் தொழுகை நடத்தத் தயாரானதை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கைது செய்தனர்.

விசாரணையில் 55 வயதான அவர் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது அந்த நபர் முழக்கங்களை எழுப்பியதாக தகவல் வௌியாகி உள்ளது. அந்த நபரின் நோக்கத்தை அறிய விசாரணை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் இருந்து அகமது ஷேக் ஏன் அயோத்திக்கு வந்தார், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உட்பட அவரது பயண விவரங்களையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட சோதனையில் ​​அவரிடமிருந்து முந்திரி மற்றும் உலர் திராட்சை போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நபர் அஜ்மீருக்குப் பயணம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூத்த காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மறுஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: