புதுடெல்லி: தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்த பிறகு, வாக்களித்த சலுகைகளை மாநில அரசுகள் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஐஎப்ஜிஎல் ரிப்ராக்டரீஸ் என்ற நிறுவனம் கடந்த 1989ம் ஆண்டு மாநில அரசு வெளியிட்ட தொழிற்கொள்கையின் அடிப்படையில், 1992ம் ஆண்டு அங்குப் புதிய ஆலையை நிறுவியது. இந்த நிறுவனத்திற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வேறு வகையில் சலுகைகளைப் பெற்றுவிட்டதாகக் கூறி 2008ம் ஆண்டு நிதியை விடுவிக்க மாநில அரசு மறுத்தது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள், ‘மாநில அரசுகள் அறிவித்த சலுகைகளை நம்பித் தொழில்துறையினர் முதலீடு செய்த பிறகு, வாக்குறுதிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப் பெறுவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.
இத்தகைய செயல் அதிகாரிகளின் மெத்தனப்போக்கையும், காலனியாதிக்க மனப்பான்மையையும் காட்டுகிறது. மேலும், இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவின்படி சமத்துவ உரிமைக்கு எதிரானதாகும்’ என்று கடுமையாகச் சாடினர். தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி சலுகைகளை மறுக்கக் கூடாது என்றும், மிகக்கடுமையான பொதுநலன் சார்ந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே விதிவிலக்கு அளிக்க முடியும் என்றும் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரிய மானியத் தொகையை உடனடியாக வழங்க ஒடிசா அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
