- காங்கிரஸ்
- ஷிண்டே
- பாஜக
- அஜித் பவார்
- மும்பை
- அக்நாத் ஷிண்டே
- Sivasena
- அம்பர்நாத்
- மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம்
மும்பை: மகாராஷ்டிராவில் அம்பர்நாத் நகராட்சியைத் தக்கவைக்கக் காங்கிரஸ் நிர்வாகிகளை வளைத்துப் பாஜக போட்ட திட்டத்தை முறியடித்து, அஜித் பவார் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள 60 இடங்களைக் கொண்ட அம்பர்நாத் நகராட்சியைக் கைப்பற்ற, ஆளும் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) இடையே உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இதில் சிவசேனாவைத் தோற்கடிப்பதற்காக, அங்குள்ள உள்ளூர் பாஜக நிர்வாகிகள் கொள்கைக்கு முரணாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுடன் கூட்டணி அமைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காங்கிரஸ் மேலிடம் அந்த 12 பேரையும் இடைநீக்கம் செய்ததால், அவர்கள் கடந்த 8ம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் பாஜகவின் பலம் 26 ஆக உயர்ந்ததால், நகராட்சியை எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்று பாஜக தலைவர்கள் கணக்குப் போட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பாஜக கூட்டணியில் இருந்த அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆகியோர் திடீரென ஏக்நாத் ஷிண்டே தரப்புக்குத் தாவினர்.
ஏற்கனவே 27 இடங்களை வைத்திருந்த ஷிண்டேவின் சிவசேனா, தற்போது இவர்களது ஆதரவுடன் 32 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை பலத்தைப் பெற்று நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் துணைத்தலைவர் பதவி தேசியவாத காங்கிரஸுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. மாநில அளவில் கூட்டணியில் இருந்தாலும், ஷிண்டே தனது சொந்த மாவட்டத்தில் பாஜகவின் வியூகத்தை முறியடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
