திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி இருளாயி (90). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இருளாயி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இருளாயி படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை இருளாயிக்கு உறவினர்கள் வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு பெற முடியவில்லை.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம், மூதாட்டியின் நிலைமையை எடுத்து கூறினர். இதையடுத்து, வட்ட வழங்கல்துறை பொறியாளர் கார்த்திகேயன், ரேஷன் கடை ஊழியர் நாகராணி ஆகியோர் நேற்று மாலை மூதாட்டி இருளாயி வீட்டுக்குச் சென்று அவரது கைரேகையைப் பதிவு பெய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினர். இதனால், மூதாட்டி நெகிழ்ச்சி அடைந்தார். ரேஷன் கடை ஊழியர்கள், மூதாட்டிக்கு வீடு தேடி சென்று பொங்கல் பரிசு வழங்கியதை அக்கம்பக்கத்தினர் பாராட்டினர்.
