×

மாஜி மெய்க்காப்பாளருடன் லிவ் இன் வாழ்க்கை; நடிப்பு தொழிலை விட்டு ‘நர்ஸ்’ வேலைக்கு சென்ற நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது காதலரும் முன்னாள் மெய்க்காப்பாளருமான ஸ்டீவ் நீல்டை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகப் பரவிய வதந்திகளுக்குப் பிரபல தொலைக்காட்சி நடிகை கேட் கோஸ்லின் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல ரியாலிட்டி ஷோ நட்சத்திரமும் நடிகையுமான கேட் கோஸ்லின், 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தனது குடும்பத்திற்கு மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய ஸ்டீவ் நீல்ட் என்பவரைக் காதலிப்பதாகக் கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும், தனது முன்னாள் கணவருடன் வாழ்ந்த போதே மெய்க்காப்பாளருடன் தவறான உறவு வைத்திருந்ததாக இவரது சொந்த மகனே குற்றம் சாட்டியிருந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கேட் கோஸ்லின் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருவரும் தற்போது ஒன்றாக வசித்து வரும் சூழலில், திருமணத் திட்டங்கள் குறித்துப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நியூசிலாந்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் கேட் கோஸ்லின் ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது இடது கை விரலில் மின்னும் மோதிரம் ஒன்று இருந்ததைப் பார்த்த ரசிகர்கள், அவர் தனது காதலரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ‘இல்லை; இது நான் வழக்கமாக அணியும் நகை தான்’ என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கிடையே, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் ஊன்று கோல் உதவியுடன் நடந்து வருவதாகவும், தற்போது மீண்டும் செவிலியர் பணியில் சேர்ந்து 12 மணி நேர ஷிப்ட்டில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Maggie ,Hollywood ,LOS ANGELES ,KATE GOSLIN ,STEVE NEELD ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்