×

இங்கிலாந்தில் கார் விபத்தில் சிக்கி 3 இந்திய பெண்கள் பலியான வழக்கில் மர்மம்: நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 

 

லண்டன்: இங்கிலாந்தில் கார் விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணையில் முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஏ46 நெடுஞ்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரு படேல் (42), பாமினி கர்சன் (42) மற்றும் விராஷி சவுகான் (39) ஆகிய 3 தாய்மார்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களுடன் பயணித்த மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளது. விசாரணையைத் தொடங்கி வைத்த விசாரணை அதிகாரி சோஃபி லோமாஸ் கூறுகையில், ‘உயிரிழந்தவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை; இது தொடர்பான காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 37 வயதுடைய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : England ,London ,A46 highway ,Leicestershire, England… ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்