ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல், நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு

வாஷிங்டன்: ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வலுவான ஆதரவாளரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். இந்த சந்திப்பின் போது, பல மாதங்களாக பரிசீலனையில் இருந்த ரஷ்ய தடைகள் மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் பச்சைக்கொடி காட்டி உள்ளார். உக்ரைன் அமைதிக்காக பல முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

இந்த மசோதா, ரஷ்யாவின் மலிவான எண்ணெய் வாங்குவதை சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் நிறுத்த வழிவகுக்கும். இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இது கூடிய விரைவில் அடுத்த வாரமே நடக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க 500 சதவீத வரியை விதிக்கும்.

ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் 25 சதவீத வரி உட்பட 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது 500 சதவீதமாக அதிகரிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையான சிக்கலை எதிர்கொள்வார்கள்.

* இந்தியா-அமெரிக்கா உறவில் ஒவ்வொரு நாளும் புதிய சவால்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான செனட்டர் கிரஹாம், இந்தியா மீது பெரிய அளவில் தடைகள் விதிக்கும் மசோதாவை முன்னோக்கி நகர்த்தி வருகிறார். இது இந்தியா, அமெரிக்கா உறவில் இயல்புக்கு மாறான நிலை ஏற்பட்டிருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது. இருதரப்பு உறவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய சவால்கள் எழுகின்றன’’ என கூறி உள்ளார்.

Related Stories: