×

பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா கோலாகலம்

*ஒரு லட்சம் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோபி : கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்துள் பாரியூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 25ம் தேதி திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர். கடந்த 2ம் தேதி தேர் நிலை பெறுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து 5ம் தேதி மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மா விளக்கு எடுத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 12 டன் விறகுகளை கொண்டு நேற்று முன்தினம் இரவு குண்டம் திறப்பு நடைபெற்றது.

நேற்று அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 6 மணிக்கு கோயில் தலைமை பூசாரி சிவநாதன் சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோயில் பூசாரிகளும், குண்டம் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வீரமக்களும் குண்டம் இறங்கினர்.

கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கோபி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் குண்டம் இறங்கிய போது அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல உள்ளனர். 10ம் தேதி நிலை சேர உள்ளது.

குண்டம் திருவிழாவையொட்டி 4 டிஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐக்கள், ஊர்க்காவல் படையினர் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அனிதா, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags : Pariyur Kondathu Kaliamman Kundam festival ,Gopi ,Kundam festival ,Pariyur ,Kondathu ,Kaliamman ,Kundam ,Erode ,
× RELATED மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய பெருமை...