×

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை

சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜ, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பாஜ மற்றும் பாமகவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை 50 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜ பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது எடப்பாடியிடம் இந்த விசயத்தை கூறினார். இதை கேட்டு எடப்பாடி அதிர்ந்து போனார். அது மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்கவே முடியாது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து அதன் பின்னர் அறிவிப்பதாக கூறிவிட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. அப்போது அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பாஜ தரப்பில் 50 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடு தொடர்பாகவும் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டதாகவும், அதிமுக 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பாஜ தரப்பில் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் ஆட்சியில் பங்கு தொடர்பாக எடப்பாடி எதுவும் பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு எதிரானவர்கள் தான் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும். இவர்கள் இருவர் தான், நயினாரை கட்சியில் இருந்து காலி செய்தவர்கள். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் அவர்கள் தான் எதிரி. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து தற்போது டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இருந்து விரட்டி விட்டனர்.

தற்போது அவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டள்ளதோடு, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்தும் அதை வலியுறுத்தினார். இதனால் வேறு வழி இல்லாமல் இருவரையும் பாஜ கூட்டணியில் சேர்க்க சம்மதித்துள்ளனர். அவர்களை எப்படி கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடியுடன் சந்திப்புக்கு பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். சென்னை அல்லது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். தேதி இன்னும் முடிவாகவில்லை. பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் நடந்த பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது.

எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும். பாஜவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். மேலும், அமைச்சரவையில் பங்கு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

Tags : Nainar Nagendran ,Edappadi ,Amit Shah ,Delhi ,TTV ,Dinakaran ,Chennai ,BJP ,president ,OPS ,Tamil ,Nadu ,Assembly ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...