×

மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய பெருமை மிக்க ஜல்லிக்கட்டு: கிராமங்களின் வியக்க வைக்கும் தகவல்கள்

 

மதுரை: மதுரை மாவட்டத்தில் தைப் பொக்கலையொட்டி 3 கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுகள் பாரம்பரிய பெருமை மிக்கவை. இந்த கிராமங்களின் வியக்க வைக்கும் தகவல்களை பார்ப்போம். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்கள் ‘ஜல்லிக்கட்டு கிராமங்கள்’ பெருமை பொங்க அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தைப்பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் தினத்தில் பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுகள் பிரசித்தி பெற்றவை.

பிள்ளையார்பாளையம் என்னும் அவனியாபுரம்
அவனியாபுரத்தை அக்காலத்தில் ‘பிள்ளைளையார் பாளையம்’ என அழைத்தனர். இக்கிராமத்து மக்களின் காவல் தெய்வமாக ‘மந்தையம்மன் கோயில்’ உள்ளது. ஆண்டுதோறும் தைப்பொங்கலன்று இக்கோயில் அம்மனுக்கு பொங்கல் படைத்து, பின்னர் தங்கள் வீட்டில் வளர்த்த காளைகளை அலங்கரித்து தெருவில் அவிழ்த்து விடும் பண்பாடு பல்லாண்டுகளாக தொடர்ந்தது. இவ்வாறு அழைத்து வரும் மாடுகளை இளைஞர்கள் போட்டிபோட்டு பிடிக்க முற்பட்டனர். அவனியாபுரத்தில் அயன்பாப்பாகுடி கிராமத்தினர் சார்பிலும், பிள்ளையார்பாளையம் சார்பிலும் மாடுபிடி போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற்றன. பின்னாளில், இவை இரண்டும் இணைக்கப்பட்டு 1990ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஜல்லிகட்டாக மாற்றபப்ட்டு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை நம்பி இப்பகுதியினர் விவசாயம் செய்து வருவதால், ‘தென்கால் பாசன விவசாயிகள்’ என்ற அமைப்பினாராலும், தற்போது மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களின் மேற்பார்வையிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இவ்வூரில் கணக்குப்பிள்ளை தெருவில்தான் முதலில் ஜல்லிக்கட்டு நடந்தது. பின்னாளில் இத்தெரு மிகவும் குறுகலாக இருப்பதால் அங்கிருந்து திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதசாமி கோவிலின் முன்பாக இப்போட்டியை நடத்த முடிவாகி, 2001ம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் சாலையில் தற்காலிக வாடிவாசல் அமைத்து, ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. ஜல்லிகட்டு நடைபெறும்போது மட்டுமே இவ்வூரில் புதிதாக வாடிவாசல் அமைக்கப்படுகிறது. இவ்வூரில் ஜன.15ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்படும்.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நாளில் சந்தை
பாலமேட்டில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இங்குள்ள காவல்தெய்வமான மஞ்சமலை சுவாமிக்காக மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கடம்ப மரங்கள் சூழ்ந்த ஊரே மதுரை. இந்த மாமதுரைக்கு வடக்கில் ‘பால மரங்கள்’ நிறைந்த மேடான பகுதியிலேயே இக்கிராமம் உருவானது என்கின்றனர். இதானலேய இவ்வூர் ‘பாலமேடு’ ஆனதென்பர். இன்றைக்கும் புது வீடு கட்ட தச்சுப்பணி செய்யும்போதும், திருமணத்திற்கான பந்தல் போடும் நாளிலும் இக்கிராமத்தினர் பழமை மாறாமல் ‘பால’மரத்தின் குச்சியை நட்டுவைத்து சாமி கும்பிட்ட பிறகே, கட்டுமானப் பணி, புது வாழ்வு துவக்குகின்றனர். இது தவிர, மதுரை மாவட்டத்தின் பால் உற்பத்தியும் இவ்வூரில் இருப்பதால் ‘பால்மேடு’ பகுதி, ‘பாலமேடு’ கிராமமாகி இருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடைபெற்ற காலத்தில் அரசு வைப்புத்தொகை அலங்காநல்லூருக்கு ரூ.2 லட்சமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாலமேட்டிற்கு ரூ.3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டு இங்குள்ள மஞ்சமலை ஆற்றுத்திடலில் பரந்த விசாலமான இடத்தில் நடத்தப்படுவதால், அதிக காளைகளை அவிழ்த்துவிடுகின்றனர். இதேபோல, பார்வையாளர்களும் அதிகளவில் வருவர். அவனியாபுரம், அலங்காநல்லூர் ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகக்குறுகலான இடத்திலேயே நடத்தப்படுகிறது. பாலமேடு வாடிவாசல் திடல் 2 கி.மீ தூரத்திற்கு ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதால், வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை ஒரு கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, அலங்காநல்லூர், அவனியாபரம் ஜல்லிக்கட்டை கூட்டத்தில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டை காண வருகின்றனர். மேலும், ஒரு சிறப்பாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில், மிகப்பெரிய சந்தையும் நடக்கிறது. இதில் இப்பகுதியில் விளையும் இயற்கை காய்கறிகள், மொச்சை, துவரை, உளுந்து, பாசிப்பயறு உளளிட்ட பயறு, தானிய வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மாடுகளுக்கான கழுத்து மணி, கால்சலங்கை, பிடி கயிறு, மூக்கணாங்கயிறு போன்ற பொருட்களும் விற்பனை நடக்கிறது. வழக்கம்போல இந்தாண்டும் சந்தை ஏற்பாடு செய்யப்படுகிறது.

உலகப்புகழ் அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு சிகரம் வைத்தாற் போல அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அக்காலத்தில் ‘அலங்கார நல்லூர்’ என அழைக்கப்பட்டது காலப்போக்கில் ‘அலங்கார நல்லூர்’ ஆனது என்கின்றனர். சித்திரை நாளில் மதுரை வைகையாற்றுக்குள் இறங்கும் கள்ளழகர், அன்றைக்கு இவ்வூரிலிருந்து 30 கி.மீட்டர் தூரத்திலிருக்கும் தேனூர் வைகையாற்றில்தான் இறங்கி வந்தார். அழகர்கோவிலில் இருந்து தோள் சுமையில் தேனூர் வருகிற கள்ளழகரையும், பக்தர்களையும் வரவேற்று இவ்வூரின் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான முனியாண்டி கோயில் பகுதியில் இறக்கி வைத்து இளைப்பாறச் செய்வது நடந்தது.

மேலும், இந்த முனியாண்டி கோயிலில் வைத்தே அன்றைக்கு கள்ளழகருக்கு பூக்களால் அலங்காரம் நடத்தப்பட்டது. அழகரை சுமக்கிற பல்லக்கும் இங்கு அலங்கரிக்கப்பட்டது. இப்படி அலங்காரம் நடந்ததால் இப்பகுதி ‘அலங்கார நல்லூர்’ ஆனது. தேனூர் ஆற்றில் இறங்கும் அழகரை மதுரை வைகையாற்றில் இறங்கும் விதமாக திருமலைநாயக்கர் பிற்காலத்தில் மாற்றியமைத்தார். தை மாதம் நடக்கும் இவ்வூர் ஜல்லிக்கட்டு தமிழர் வீரவிளையாட்டை காட்டுவதோடு, இவ்வூர் பகுதிகளில் இன்றும் எஞ்சி இருக்கும் கிராமிய கலாச்சாரத்தை அறிவிக்கும் ஒரு பண்பாட்டு அடையாளமாக உலகின் காதுகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

Tags : Jallikatu ,Madurai ,Jallikatu Weergames ,Thai Bokkalaioti ,Madurai district ,Avanyapuram ,Palamedu ,Alanganallur ,
× RELATED கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக...