*அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தனர்
அருப்புக்கோட்டை/சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 39 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு, ரூ.3 ஆயிரம் வழங்கும் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று துவக்கி வைத்தனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தத்திலும் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி 33வது வார்டிற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ள ரேசன் கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில், ‘‘நிதிச் சுமை இருந்தாலும் கூட தமிழர் திருநாள் நம்முடைய பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் விடுபட்ட தகுதியான மகளிர் ஆர்டிஓவிடம் மேல்முறையீடு செய்யலாம். சரிபார்த்து வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சுகபுத்ரா, ஆர்டிஓ மாரிமுத்து, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் ஏகே.மணி, ஒன்றிய திமுக செயலாளர் பாலகணேசன், பொன்ராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வேலுச்சாமி, தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சோலையப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கோகுலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகாசி:
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம் 1வது வார்டு முத்துமாரி நகரில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அசோகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேயர் சங்கீதாஇன்பம் முன்னிலை வகித்தார். 1வது வார்டு கவுன்சிலர் அ.செல்வம் வரவேற்று பேசினார்.
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பிஞ்சு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை தீட்டி வழங்கி உள்ளார். ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் நிச்சயம் பயன்பெற்று வருகிறது.
இதேபோன்று சிவகாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது. சிவகாசி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரிங்ரோடு, 4 வழிச் சாலை என பல வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
வருகிற காலங்களிலும் தேவைப்படும் வளர்ச்சி பணிகள் செய்யப்படும். திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், முன்னாள் யூனியன் துணைத்தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிகண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.சந்திரன், அதிவீரன்பட்டி செல்வம், மாவட்ட கழக துணைசெயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் இன்பம், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகர பகுதி கழக செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மாரீஸ்வரன், அப்துல்முத்தலிப், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் அக்னிவீர், மாநகர பொருளாளர் வெள்ளைத்துரைப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், காங்கிரஸ் கமிட்டியின் வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 1வது பகுதி கழக செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான அ.செல்வம் செய்திருந்தார்.
காரியாபட்டி:
இதேபோல் காரியாபட்டியில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட திட்ட அலுவலர் கேசவதாசன், பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன், மண்டல இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கேசவதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத், விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன், கவுன்சிலர் மதியழகன் உட்பட கூட்டுறவு பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
