×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழும், தமிழ்நாடும் செழிக்க புத்தகங்களை இறுகப் பற்றுங்கள்

சென்னை: தமிழும், தமிழ்நாடும் செழிக்க வேண்டும் என்றால், நீங்கள் வெற்றியாளர்களாக உயர வேண்டும் என்றால், புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின், சென்னை 49வது புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சிறந்த பதிப்பாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புத்தகக் காட்சிக்கு இன்னும் அதிகளவிலான மக்கள் வரவேண்டும் என்று, நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். தலைசிறந்த படைப்பாளிகளுக்கு, முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் பொற்கிழி விருதுகளை வழங்குகிறோம். கலைஞர் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தன்னுடைய சொந்த நிதியில் இருந்து வழங்கிய ரூ.1 கோடி நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து, ஆண்டுதோறும் 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அப்படி வழங்கப்பட்டதில் இதுவரைக்கும் ரூ. 1 கோடியே 11 லட்சம் விருதாக வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான விருதுகளை நவீன தமிழ்க் கவிதையின் மிக முக்கியமான முகமாக இருக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு கவிதைக்கும் – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காத்திரமான படைப்புகளைப் படைக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கு சிறுகதைக்கும் – பன்முக எழுத்துக்குச் சொந்தக்காரரான இரா.முருகனுக்கு நாவலுக்கும் – ஓவியங்கள், சிற்பங்கள், கட்டிடக் கலைகள் அது குறித்த ஆய்வை நெடுங்காலமாக செய்துவரும் பேராசிரியர் பாரதிபுத்திரனுக்கு உரைநடைக்கும் – நவீன நாடக மேடைகளில் இயங்கி வரும் முக்கியமான கலைஞரான கருணா பிரசாத்துக்கு நாடகத்திற்கும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான அறிஞரும், எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து, பெரியார் சுயமரியாதைச் சமதர்மம் என்ற முக்கியமான வரலாற்று ஆவணத்தை தந்துள்ள வ.கீதாவுக்கு மொழிபெயர்ப்புக்கும் இன்றைக்கு வழங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.

இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் தமிழும், தமிழ்நாடும் செழிக்க வேண்டும் என்றால், நீங்கள் வெற்றியாளர்களாக உயர வேண்டும் என்றால், புத்தகங்கள் எனும் அறிவாயுதங்களை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். உங்களின் சிந்தனைகள் வளர வளரத்தான் நம்முடைய தமிழினத்தின் வளர்ச்சி, மேல் நோக்கி போகும். போராடி போராடி இந்த நிலைமைக்கு உயர்ந்து வந்திருக்கிறோம். இங்கிருந்து நாம் முன்னால்தான் செல்ல வேண்டும். யாரும் நம்மை வீழ்த்த அனுமதிக்க கூடாது. அதனால், தினமும் ஒருமணி நேரமாவது படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் நேரத்தை புத்தகங்களில் செலவு செய்யுங்கள். புதிய எழுத்தாளர்கள் உருவாகி வாருங்கள். எழுத்துகளை படிக்க படிக்க எண்ணங்கள் வளரும், எண்ணங்களை எழுத்துகளாக படைக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும். வாசிப்பு பழக்கம் வளரவும், சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் படைப்புகளை ஊக்குவிக்கவும் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil ,Tamil Nadu ,Chennai ,49th Book Fair ,South ,Indian Booksellers ,and Publishers ,Association ,Chennai… ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம்...