×

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை, ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாள் நடைபெறும். இந்த ஆண்டு தை அமாவாசை இன்று காலை கொடியேற்ற துவக்க விழா நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய தை அமாவாசை திருவிழா 18ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம், மாலை 6 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.

19ம்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தல் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சி நடக்கிறது. தை அமாவாசை நிறைவு விழா 20ம்தேதி (செவ்வாய் கிழமை) நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலைச் சயனம், மங்கள தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

தை அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், சாலை மற்றும் மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

Tags : Aral Sherman Arunasala Swami Temple Thai Amavasi Festival ,Aral ,Aerial ,Sherman Arunasala Swami Temple ,Thoothukudi ,Echoil ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...