உடுமலை: உடுமலை அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதி கல்லூரி மாணவி பலியானார். விருதுநகரை சேர்ந்த 20 பேர் சுற்றுலா வேனில் நேற்று கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு, நேற்று மாலை விருதுநகர் புறப்பட்டனர். உடுமலை சாலையில் எரிசனம்பட்டி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் எதிரே வந்த பைக் மீது வேன் மோதியது.
இதில், பைக்கை ஓட்டி வந்த கொடிங்கியத்தை சேர்ந்த தினகரன் (19), பின்னால் அமர்ந்து வந்த தேவனூர்புதூரை சேர்ந்த வேதஸ்ரீ(18) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வேதஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். பலியான வேதஸ்ரீ பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
