செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் கணினி அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும்: மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் நாசர் பேச்சு

ஆவடி, ஜன.9: தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘உலகம் உங்கள் கையில்’ உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி, ஆவடி வட்டம், பட்டாபிராம் டிஆர்பிசிசிசி இந்து கல்லூரியில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆகியோர் தலைமை தாங்கி உயர் கல்வி பயிலும் 2034 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினர். தொடர்ந்து, அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், ‘மாணவர்கள் கல்வியிலும், கணினி அறிவியலிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ‘உலகம் உங்கள் கையில்’ என்னும் மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் கணினி அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு மாணவர்கள் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பதால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க முடியும், என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி தெரிவிப்பதாக கூறினார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் ஜெயகுமார், உதவி இயக்குநர்(பயிற்சி) மோகன், மாமன்ற உறுப்பினர்கள், மண்டலக் குழு தலைவர்கள், பகுதி செயலாளர், கல்லூரி முதல்வர் முனைவர் கல்விக்கரசி, கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: