×

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

நாமக்கல், ஜன.9: நாமக்கல் அருகே குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த மூதாட்டி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நாமக்கல் கோட்டைரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து சுமார் 65வயது மூதாட்டி ஒருவர் தங்கி இருந்தார். அவர் தனது பெயர் பாவனிகீர்த்தி என்றும், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். இதன் மூலம் அந்த பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமான மூதாட்டி, கடந்த 6 மாத காலமாக குறைந்த விலைக்கு தங்கம், பாதி விலைக்கு மிக்சி, கிரைண்டர் போன்றவை வாங்கி தருவதாக கூறி, அப்பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்துள்ளார். சிலருக்கு குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை அவர் வாங்கி கொடுத்துள்ளார்.

இதை நம்பி அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், அவரிடம் தங்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கேட்டு பணம் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அந்த மூதாட்டி தலைமறைவாகி விட்டார். அவர் தனக்கு காட்டுபுத்தூர் என கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று அவரை தேடியுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்து அந்த மூதாட்டியின் அடையாளங்களை கூறி புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, வகுரம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகார் மனு விபரம்: மூதாட்டி தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் , ஒரு பவுன் தங்கத்தை ரூ.80 ஆயிரத்திற்கு தருவதாகவும் கூறினார். இதை நம்பி கடந்த அக்டோபர் மாதம் 2 தவணையாக ரூ.6 லட்சம் கொடுத்தேன். ஆனால் எனக்கு தங்கம் எதுவும் தரவில்லை. தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது போல அந்த மூதாட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Namakkal ,Kottari Road, Namakkal ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி