புதுமையை வரவேற்போம்!

என்றென்றும் அன்புடன் 9

தினசரி வாழ்வில் எல்லோருக்கும் ஒரு அலுப்பு வரும். ஒரு routine வாழ்க்கைக்கு நாம் பழகி விடுவோம். தனிப்பட்ட வாழ்வில் மட்டும் அல்ல ஒரு நிறுவனமோ, வியாபாரமோ தன்னைத் தானே புதிப்பித்துக் கொள்ளாவிட்டால், காலப் போக்கில் காணாமல் போகும்.ஒரே மாதிரி சிந்தனை, சின்ன வட்டத்தில் சுற்ற வைக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரும் ஓட்டம் எல்லோரையும் அலைகழிக்கிறது. எல்லாம் இருந்தும்இல்லாமல் இருக்கிறோம்.

நம் வாழ்வில் புதுமை துளிர்க்க, படைப்பாற்றல் வளர கிருஷ்ணனின் வாழ்க்கையில் இருந்து பல உதாரணங்களை பார்க்கலாம்.புதுமைக்கு அடித்தளம் விரிவான, ஆழமான தகவல்கள். இன்று நம்மைச் சுற்றி பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.குப்பையில் இருந்து கோழி தன் உணவை பொறுக்குவது போல், தகவல் களஞ்சியத்தில் இருந்து வேண்டிய சரியான தகவல்களை எடுக்கத் தெரிய வேண்டும்.

கிருஷ்ணனுக்கு தெரிந்து இருந்தது. முசுகுந்தன் பல யுகங்களாக ஒரு குகையில் தூங்குவது தெரிந்து அவனை எழுப்புபவர்கள், பஸ்பமாவார்கள் என்கிற தகவலை உரிய நேரத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். காலயவனன் தாக்க வரும் பொழுது முசுகுந்தன் தூங்கும் குகைக்குள் ஓடி மறைந்தான். காலயவனனும் படுத்து இருப்பது கிருஷ்ணன் என்று நம்பி எட்டி உதைத்தான்.முசுகுந்தன் கோபத்துடன் முழித்துப் பார்க்க காலயவனன் பஸ்பமானான்.

தகவல்கள் என்றுமே பெரும் பலம்.நாம் சேகரித்த அறிவை அசைபோட வேண்டும். அதன் மூலமே புது சிந்தனைகள் உருவாகும். போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று சொல்லிக் கொண்டே போகிறான். இவை அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைச் செய்ய வைப்பதற்காக, அதாவது அம்பு எடு. எதிரியை வீழ்த்து என்பதற்காக. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ பல கோணங்களில் பார்ப்பது முக்கியம்.

நல்ல சிந்தனைகள், செயல்கள், எதிர்மறையான கேள்விகளில் இருந்து குதிக்கும்.மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பல இடங்களில் கேள்வி கேட்கிறான்.பீஷ்மரிடம் யாருமே கேட்கத் தயங்கிய கேள்விகளை முன் வைக்கிறான்.‘‘நீ எதற்காக பிரம்மச்சாரி விரதம் பூண்டாய். அதனால் குரு வம்சத்திற்கு எந்தஉதவியும் இல்லை. குழப்பம்தான் மிஞ்சியது’’ என்று நேரடியாக பீஷ்மனை தாக்கினான்.

அதேபோல், விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவனவாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்த மகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின.ஆனால், தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன் என்று உறுதியளித்து மேகங்களைஊக்குவித்தான்.

இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. கூரிய அம்புகள்போல் நீர் தாரைதாரையாக வர்ஷித்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின.

நிலைமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் தவித்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி இருந்தனர்.

கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேர வேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்திரன் திட்டமிட்டு தன் கோபத்தை இவ்வாறு காட்டுகிறான். இந்திரன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான்.

பிரபஞ்சக் காரியங்களை நடத்துவதில் அவன் தனியுரிமை பெற்றவனல்ல என்பதையும், அவனுக்கு உணர்த்தி, அவனது கர்வத்தை அடக்கி, விருந்தாவன வாசிகளை காப்பாற்ற வேண்டும் என கிருஷ்ணர் நினைத்தார். பின்பு கிருஷ்ணர், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். கோவர் தன கிரிதாரி எல்லோரையும் அக்குடையின் கீழ் காத்தார். இந்திரன் தவறை உணர்ந்தான். கோவிந்த பட்டாபிஷேகமும் நடந்தது.

புதுப்பித்துக் கொள்வதற்கு துணிவு வேண்டும். கிருஷ்ணன் தன் மக்களை ஜராசந்தன் தொடர் தாக்குதலில் இருந்து காப்பாற்ற கடலுக்கு மத்தியில் துவாரகையை நிர்மாணித்தான். யாருமே செய்யத் துணியாத செயலை செய்தான்.கிருஷ்ணன் என்றும் பிறர் வளர்ச்சியில் உதவியாக இருந்தான், எவரையும் குறைவாக மதிப்பிடாமல் அவர்கள் கருத்தை உள் வாங்கினான். உத்தவனுக்கு பெரும் பதவி கொடுத்து, சமமாக நடத்தி அனைத்தையும் கலந்து ஆலோசித்தான். துவாரகையின் வளர்ச்சிக்கு அதுவே காரணமாக அமைந்தது.நல்ல கருத்துக்களோ, அறிவுரைகளோ யாரிடம் இருந்து வருகிறது என்று பார்க்காமல் அவை நம் வாழ்வை புதுப்பிக்க உதவினால் ஏற்க வேண்டும்.

புதியவைகள் நம் முயற்சியால் மட்டும் உதிப்பதில்லை, நண்பர்கள் கூடும் பொழுதோ, புதிய நபர்களுடன் பேசும் பொழுதோ கருத்து மோதல்களில் கூட புது சிந்தனை உதிக்கும். ஜராசந்தனை எதிர்க்கும் பொழுது, பீமனின் பலமும், உத்தவனின் புத்திசாலி தனமும், அர்ஜுனனின் அணுகு முறையும், கிருஷ்ணனிடம் இருந்த தகவல்களும் பெரிதும் உதவின. ஜராசந்தனை இரண்டு கூறாக பிய்த்து திரும்பவும் சேர முடியாதபடி வேறு திசைகளில் எரிய வேண்டும் என்பதை கிருஷ்ணனே காட்டிக் கொடுக்கிறான்.புதிய சிந்தனையோ, பெரும் செயல்களோ உற்சாகமான மனதில் தான் உதிக்கும் அதற்கு நம்மிடம் எதிலும் எப்பொழுதும் ஆர்வம் வேண்டும். ஆர்வம் செயல்களில், சிந்தனையில் மட்டுமில்லை. சகமனிதர்களிடமும்.

(தொடரும்)

ரம்யா வாசுதேவன்

Related Stories: