அருளாளர்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கும்!

சமய உலகில் அருளாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கின்ற பொழுது, நாம் சமயத் தத்துவங்களை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான பல வாழ்வியல் உண்மைகளையும், பண்புகளையும் தெரிந்து கொள்ளுகின்றோம். ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன்; வைணவ சமயத்தின் தலைமை பீடத்தில் இருந்தவர், ஸ்ரீ ராமானுஜர். அது நம் எல்லோருக்கும் தெரியும். விசயம் என்னவென்றால், அவருக்கு ஐந்து ஆச்சாரியர்கள்.
* பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து, திருமந்திர உபதேசம் செய்த நேரடியான குரு பெரிய நம்பிகள்.
* அவருக்கு திருமந்திர, துவைய, சரம ஸ்லோக அர்த்தங்களைச் சொன்னவர், திருக்கோட்டியூர் நம்பிகள்.
* திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை எல்லாம் கற்பித்தவர், திருமாலிருஞ் சோலை திருமாலை ஆண்டான்.
*  ராமாயணத்தின் தத்துவங்களைச் சொல்லித்தந்தவர் பெரிய திருமலை நம்பிகள்.
* சரம பருவ நிஷ்டை (நிறைவான விஷயம்) எனும் ரகசியமான விஷயத்தைச் சொல்லித்தந்தவர், திருவரங்கப் பெருமாள் அரையர்.திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் குமாரர்.

பெரிய திருமலை நம்பிகள் ராமானுஜரின் தாய் மாமா. திருமலையில் கைங்கரியம் செய்து கொண்டிருந்தவர். பெரிய நம்பிகளும், திருக்கோட்டியூர் நம்பிகளும், திருமாலை ஆண்டானும் ஆளவந்தாரின் நேர் சீடர்கள். மிகப்பெரிய மகான்கள். ஆனால் பாருங்கள், ஆளவந்தார் இவர்கள் யாரையும் வைணவத்தின் தலைமைப் பீடத்தில் அமர்த்தாமல், அதிகம் பார்த்திராத, கேள்வி மட்டுமே பட்டிருந்த, ராமானுஜர்தான் வைணவத் தலைமை பீடத்திற்கு வரவேண்டும் என்று விரும்பி, அவரையே நியமித்தார். வயதில் குறைந்த ஸ்ரீ ராமானுஜரின் நியமனத்தை அவருடைய ஐந்து குருமார்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். ஆறாவதாக ஒருவர் உண்டு. அவர்தான் திருக்கச்சி நம்பிகள். ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை வரதராஜ பெருமாளிடமிருந்து வாங்கிக் கொடுத்தவர். ஸ்ரீ ராமானுஜரை வழி நடத்தியவர். இவர் மனம் தளர்ந்த போதெல்லாம் ஆறுதல் சொல்லி நெறிப் படுத்தியவர். இவ்வளவு பேரும் ஸ்ரீ ராமானுஜரின் தலைமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றார்கள். அந்தத் தலைமைக்குக் கட்டுப்படுகின்றார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம், இந்த ஆச்சாரியர்கள் தங்களுடைய தனித்துவத்தையும் விட்டுத் தரவில்லை. அதற்கு உதாரணம் சொல்லலாம். ரகசிய அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு திருவரங்கத்திலிருந்து 18 முறை திருக்கோட்டியூர் நம்பிகளைத் தேடி ராமானுஜர் சென்றார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
ஒவ்வொரு முறையும் அவர் “அவகாசமில்லை, பிறகு பார்க்கலாம்’’ என்று சொல்லி அர்த்தத்தைச் சொல்லவில்லை. 18-வது முறைதான் அந்த அர்த்தத்தைச் சொல்லுகின்றார்.
இந்த விஷயம் நடந்த பொழுது, ராமானுஜர் வைணவத்தின் தலைவராக இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது.

இங்கே ஒருவருக்கொருவர் தங்கள் தனித்தன்மையை விட்டுத் தரவில்லை. அதே சமயத்தில், தலைமைக்கு குருவாக இருந்தாலும், அதாவது ஸ்ரீ ராமானுஜருக்குக் குருவாக இருந்தாலும், அந்தத் தலைமைப் பீடத்திற்கு என்ன மரியாதை தர வேண்டுமோ, அந்த மரியாதையையும் அந்தப் பெரியவர்கள் தருகிறார்கள். ஸ்ரீ ராமானுஜரும், தான் வைணவ பீடத்தின் தலைவர் என்று அதிகாரத்துடன் நடந்து கொள்ளவில்லை. ஒரு ரகசிய அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் பீடாதிபதி என்கிற முறையில் திருக்கோட்டியூர் நம்பிகளை திருவரங்கத்திற்கு வரவழைத்து அர்த்தத்தைக் கேட்கவில்லை. தான் வைணவ பீடத்தின் தலைவராக இருந்தாலும், 18 முறை நடையாய் நடந்துதான் அந்த அர்த்தத்தைக் கேட்கிறார். அந்த ஆச்சாரியனுடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறார். இன்னும் ஒரு உதாரணம் பார்க்கலாம். இதுவும் ஸ்ரீ ராமானுஜர் தலைமை பீடத்தில் இருந்தபொழுது நடந்த நிகழ்வு. அவர் ஒருமுறை திருமலைக்கு யாத்திரை செல்கின்றார். இவருடைய வருகை, இவருடைய குருவும் மாமாவும் ஆளவந்தாரின் நேர் சீடருமான பெரிய திருமலை நம்பிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவர் சுவாமி ராமானுஜரின் வருகைக்காகக் காத்திருக்கிறார். ஸ்ரீ ராமானுஜர் திருப்பதியில் நுழையும் பொழுது பெரிய திருமலை நம்பிகள் பூர்ண கும்ப மரியாதையோடு வேத கோஷம் செய்து அவரை வரவேற்கிறார். ஸ்ரீ ராமானுஜர் அவரிடத்திலே ஒரு கேள்வி கேட்கிறார்.

“சுவாமி எளியேனை வரவேற்பதற்கு பெரியவரான நீங்களே வர வேண்டுமா? யாராவது ஒரு சிறியவரிடத்திலே இந்தக் காரியத்தை ஒப்படைக்கலாகாதா?’’அப்பொழுது பெரிய திருமலை நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரிடத்திலே சொன்ன பதில் முக்கியமானது. எந்த அடிப்படையில் பதில் சொல்கிறார் தெரியுமா? தன்னுடைய தங்கையின் மகன் ராமானுஜர் என்று நினைத்துப் பதில் சொல்லவில்லை. வைணவ சமயத்தின் தலைவர் என்கிற முறையிலே பதிலைச் சொல்லுகின்றார்.“தேவரீர் சொல்வது உண்மைதான் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஒரு சிறியவரிடத்திலே இந்தக் காரியத்தை ஒப்படைக்கலாம் என்று நினைத்தேன். அதற்காக என்னைவிட சிறியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று இந்த திருப்பதி திருமலை முழுக்க தேடித்தேடிப் பார்த்தேன். ஒருவரும் கிடைக்காததால், அடியேனே வந்தேன்’’ என்றாராம்.இந்தச் சுவாமியிடத்திலேயேதான் ராமானுஜர் ஒரு வருட காலம் ஸ்ரீ ராமாயணத்தைக் காலட்சேபம் செய்தார். ஒரு காலக்ஷேப அதிகாரி, ஞானத்திலும் வயதிலும் பெரியவர், எத்தனை அடக்கத்துடன் நடந்து கொள்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். காரணம் அவர் அருளாளர். அருளாளர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.இன்னும் ஒரு சம்பவத்தையும் பார்க்கலாம். பொதுவாக சீடர்கள்தான் குருவை வணங்குவார்கள். ஆனால், சில நேரங்களில் குரு, சீடரை வணங்குவதும் உண்டு. திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் செய்திருக்கிறார்.

அதில் ஒரு வரி; “திருமாலை பாடக் கேட்டு, வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருகவென்று மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே’’ (திருநெடுந்தாண்டகம் 14) என்று வரும். ஒரு பெண், கிளி வளர்க்கிறாள். இவள் பகவானுடைய திருநாமங்களைப் பாடும் பொழுது அந்தக் கிளியும் நாமங்களை கற்றுக் கொள்கிறது. இவள் ஒருநாள், தளர்ந்திருக்கும் பொழுது, இவளை மகிழ்விப்பதற்காக அந்த கிளி இவள் சொல்லித்தந்த நாமங்களைப் பாடுகிறது. உடனே இவள் அந்தக் கிளியை அருகே அழைத்து, உன்னை வளர்த்ததால் இன்று நான் பயன் பெற்றேன் என்று நன்றியறிதலாக (உபகார ஸ்மிருதி) கைகூப்பி வணங்கினாளாம். ஒருவன் புத்திரனாக இருக்கலாம், சீடனாக இருக்கலாம், பகவத் விஷயத்துக்கு உதவுபவனாக இருந்தால் அவனுக்கு தகுந்த கவுரவத்தைத் தரவேண்டும் என்பது வைணவ மரபு.அந்த அடிப்படையில், ஸ்ரீ ராமானுஜரின் பெருமையையும், கம்பீரத்தையும், அவருடைய செயல்களையும் பார்த்து, ஒருமுறை அவருடைய குருவாகிய பெரிய நம்பிகள் தண்டனிட்டு வணங்கினாராம். அப்பொழுது சிலர்,
“இது என்ன குரு சிஷ்ய இலக்கணம்? சிஷ்யனை குரு வணங்கலாமா?’’ என்று கேட்டபொழுது பெரிய நம்பிகள் சொன்னாராம். “என்னுடைய ஆச்சாரியர் ஆளவந்தாராக நினைத்து வணங்கினேன்’’ ஸ்ரீ ராமானுஜரிடத்திலே; “உங்கள் குரு வணங்குவதை நீங்கள் தடுக்க வேண்டாமா?’’ என்று கேட்ட பொழுது அவர் சொன்னாராம்; “அவர் என்னை வணங்குவதாக நான் நினைக்கவில்லை. தன்னுடைய ஆச்சாரியரை வணங்குகின்றார். அவருடைய ஆச்சாரியரை வணங்குவதை நான் ஏன் தடுக்க வேண்டும்?’’ என்றாராம். இந்த மனோபாவம்தான் அருளாளர்களின் மனோபாவம்.

தேஜஸ்வி

Related Stories: