முத்தியால்பேட்டை-வையாவூர் புறவழிச் சாலையில் குறுகிய வளைவுகளால் அதிகரிக்கும் விபத்துகள்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை- வையாவூர் புறவழிச் சாலையில் பல்வேறு குறுகிய சாலை வளைவுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் இருந்து வையாவூர் வரை செல்லும் புறவழிச் சாலையை ஒட்டி நத்தப்பேட்டை, களியனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மக்களின் பிரதான சாலையாக விளங்கும் இந்த புறவழிச் சாலையில் நாள்தோறும் வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது மட்டுமின்றி காஞ்சிபுரம் நகர் பகுதியில் திருவிழா மற்றும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடந்தால் இந்த புறவழிச் சாலை வழியாக காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களை போலீசார் அனுப்புவர்.

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்த புறவழிச் சாலையில் பல்வேறு பகுதிகளில் குறுகிய வளைவுகள் காணப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் வளைவுகள் தெரியாமல் திக்குமுக்காடி சாலையை ஒட்டியுள்ள கால்வாய் மற்றும் வயல்வெளிகளில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறையிடம், அதிக வாகனங்கள் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நெடுஞ்சாலை துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையின் பல்வேறு பகுதிகளில் குறுகிய வளைவுகள் காணப்படுகின்றன. இந்த குறுகிய வளைவுகளில் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்லும் தொழிற்சாலை கனரக வாகனங்கள் திரும்பும்போது விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. இது மட்டுமின்றி இந்த சாலையில் புதிதாக பயணிக்கும் வாகன ஓட்டிகளும் திடீரென வளைவுகள் வருவதால் திரும்ப முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

வளைவு பகுதிகளில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நெடுஞ்சாலைத்துறை எடுக்காததால் இங்கு இரவு நேரங்களில் நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இந்த சாலையின் மையப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது அங்கு குறுகிய வளைவு ஒன்று உள்ளது.  அந்த வளைவில் விபத்தகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வளைவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த புறவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைதுறையுடன் இணைந்து ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: