ஐதராபாத்: ஐதராபாத் கோகாபேட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தனது ‘அல்லு சினிமாஸ்’ திரையரங்கின் திறப்பு விழாவில், அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள பிரபல ‘நிலோபர்’ ஓட்டலுக்குச் சாதாரணமாகத் தேநீர் அருந்தச் சென்றனர். இதையறிந்த ரசிகர்கள், அங்கும் குவிந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்ததால் அங்குத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் பதற்றமடைந்த அல்லு அர்ஜுன், கூட்ட நெரிசலில் சிக்கிய தனது மனைவியைப் பாதுகாப்பாக அணைத்து பிடித்தபடியே அங்கிருந்து அழைத்துச் சென்றார். ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் காரில் ஏறுவதற்குச் சிரமப்பட்டனர். காரில் ஏறிய பின்பும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு அல்லு அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
