- திருப்பூருர்
- மாமல்லபுரத்தில்
- பக்கிங்ஹாம் கால்வாய்
- பழைய மாமல்லபுரம் சாலை
- கிழக்கு கடற்கரை சாலை
- புதுச்சேரி
- சென்னை
- கேளம்பாக்கத்தில்
- கோவளம்…
திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இடையே பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் புதுச்சேரியில் இருந்து சென்னை வரை நீண்டு காணப்படுகிறது. கேளம்பாக்கம் மற்றும் கோவளம் இடையே இந்த பக்கிங்காம் கால்வாயை ஒட்டி முகத்துவாரம் உள்ளது. முட்டுக்காடு படகுத்துறை அருகே இந்த முகத்துவாரம் கடலில் கலக்கிறது. முட்டுக்காடு படகுத்துறை, கோவளம், திருப்போரூர் நெம்மேலி சாலை ஆகிய இடங்களின் ரம்யமான சூழ்நிலை மற்றும் இதமான பருவநிலை காரணமாக ஆண்டு முழுவதும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.
அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்க காலம் என்பதாலும், இந்த கால கட்டத்தில் வெயில் குறைவாக இருப்பதாலும் வெளிநாட்டில் இருந்து குறிப்பாக ஆஸ்திரேலியா, ரஷ்யா, சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, பர்மா, இலங்கை, கனடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பறவைகள் இப்பகுதிக்கு வருகின்றன. இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல், கூந்தன்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் இந்த பறவைகள் இங்கு நிலவும் சீதோஷ்ணம், முகத்துவாரத்தில் கிடைக்கும் சிறிய மீன்கள் ஆகியவற்றுக்காக இப்பகுதியில் முகாமிடுகின்றன.
கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சுறாக்குருவி போன்ற உள்நாட்டு பறவைகளும், பின்டைல், பிளாக்விங்டு, ஸ்டில், கிராகிரான், கிரீன்சங், கார்கனி, கோல்டன் பிளவர் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகின்றன. இவற்றைப் பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களும், பறவை ஆர்வலர்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவளம் பகுதிக்கு வருகை தருகின்றனர்.
அதி நவீன கேமராவில் படம் பிடிக்கும் புகைப்பட கலைஞர்களும் வெளிநாட்டு பறவைகளின் செயல்பாடுகளை படம் பிடித்துச் செல்கின்றனர். மேலும், பறவைகளை பற்றி ஆராய்ச்சி செய்வோரும் பைனாகுலர் மூலம் பறவைகளை கண்காணிக்கின்றனர். இந்தநிலையில் பறவைகளின் வருகையால் தற்போது திருப்போரூர் நெம்மேலி சாலை மற்றும் கோவளம், முட்டுக்காடு முகத்துவார பகுதிகள் திடீர் சுற்றுலாத்தலமாக மாறி வருகின்றன. இதனைக் காண சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
* வேட்டையாடும் கும்பல்
இங்கு வரும் பறவைகளை சிலர் வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்தும் அவலமும் நிகழ்கிறது. திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்களின் கள்ளத் துப்பாக்கிகளுக்கு இந்த பறவைகள் இரையாகின்றன. இவற்றை கொன்று தனிநபர்களுக்கும், மதுக்கடை பார்களுக்கும் நல்ல விலைக்கு அவர்கள் விற்கின்றனர்.
நம் நாட்டிற்கு வரும் விருந்தினர்களான பறவைகளை சுட்டுக்கொன்று பணத்திற்காக விற்பனை செய்யும் இந்த நபர்களை கண்டறிந்து வனத்துறை நிர்வாகம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
