சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் என்ற மின்னணு மனு தாக்கல் நடைமுறையை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இ-பைலிங் கட்டாயத்தை எதிர்த்தும் அந்த அறிவிப்பாணையை திரும்ப பெற கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் வாதிடும்போது, இ-பைலிங் நடைமுறையால் வழக்கமாக மனு தாக்கல் செய்யப்படும் நடைமுறைக்கு முழுமையாக தடை விதிக்க கூடாது. இ-பைலிங் நடைமுறையோடு நேரடியாக மனு தாக்கல் செய்யும் முறையும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினை குறித்து பொங்கலுக்கு பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இ-பைலிங் முறையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி நிறுத்தி வைத்து அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளார்.
