கரூர், ஜன. 5: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு 9 போலீசார் நேற்று ஆஜராகினர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 போலீசாரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, அவர்கள் அனைவரும் தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை, அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு விசாரணை மேலும் பல தரப்பினரிடம் தொடர உள்ளது.
