அல்மோரா: உத்தரகாண்ட் பா.ஜ அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா. இவரது கணவர் கிர்தாரி லால் சாஹு, இவர் அல்மோராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் கிர்தாரி லால் சாஹூ கூறுகையில்,’ முதுமையில் திருமணம் செய்துகொள்வீர்களா? அது முடியாது. எனவே இப்போது உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால், நாங்கள் உங்களுக்காக பீகாரில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வருவோம். அங்கு ₹20,000 முதல் ₹25,000 வரை ஒரு பெண்ணை அழைத்து வரலாம். எனவே என்னுடன் வாருங்கள், நாங்கள் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறோம்’ என்று கூறினார். பீகார் முழுவதும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அவரது பேச்சுக்கும் பா.ஜவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பா.ஜ விலகியது. பிரச்னை பெரிதானதால் கிர்தாரிலால் சாஹு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில்,’எனது வார்த்தைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளது. நான் ஒரு நண்பரின் திருமணம் பற்றி மட்டுமே குறிப்பிட்ேடன். இருப்பினும் என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றுதெரிவித்துள்ளார்.
* பெண்களின் வாக்குக்கு ரூ.10 ஆயிரம்; பெண் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் தேஜஸ்வியாதவ் சாடல்
சாஹுவின் கருத்துக்களால் பீகாரிலும் அரசியல் சர்ச்சை வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘பீகாரில் பெண்களின் வாக்குகளை ₹10,000 கொடுத்து வாங்கிய பிறகு, இப்போது பீகாரில் இருந்து பெண்களை ₹20000-25,000-க்கு அழைத்து வருவோம் என்று பாஜ தலைவர்கள் கூறுகிறார்கள். பாஜ ஆதரவாளர்கள் பீகார் மற்றும் பெண்கள் மீது எப்போதும் இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்’ என்றார்.
