புனே: மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளான பாஜ தேசியவாத காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிம்ப்ரி சிஞ்ச்வட்டில் நடந்த பிரசாரத்தில் அஜித்பவார் பேசுகையில், ‘‘இன்று, இந்த நகரில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நான் பாடுபடுவேன். இங்கு வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் 2017 முதல், பாஜ ஆளுகையில் மாநகராட்சியில் ஊழல் பெருகி விட்டது. டெண்டர்கள் முறைகேடாக விடப்படுகின்றன. ஒப்பந்தங்கள் ஒரு சிலருக்கே வழங்கப்படுகின்றன. பிம்ப்ரி சிஞ்ச்வட் மாநகராட்சி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது’’ என பேசினார். இதற்கு பாஜ கடும் பதிலடி கொடுத்துள்ளது.
பாஜ தலைவர் ரவீந்திர சவான் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள கட்சியை பற்றித்தான் அஜித்பவார் கூறியுள்ளாரா? அவருக்கு பதிலடியாக நாங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினால், அது அவருக்கு (அஜித்பவாருக்கு) கடுமையான சிக்கல்களை உருவாக்கும். இவ்வாறு ரவீந்திர சவான் கூறினார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
