சென்னை: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் ஆபரண தங்கத்தின் விலை இன்று சென்னையில் குறைந்துள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கத்தின் விலை, இன்று 480 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் 1,00,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து, 12,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை விட வெள்ளியின் விலையில் இன்று மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ஒரே நாளில் 4,000 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,56,000 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் சரிந்து, 256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவு இந்திய சந்தையிலும் பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
