கொல்கத்தா: கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ/ஐபிஎல் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழலில் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சர்ச்சை முற்றிய நிலையில், கேகேஆர் அணி உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் பிசிசிஐ மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிசிசிஐ, தற்போது முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க கேகேஆர் அணிக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
‘ஐபிஎல் விதிகளின்படி, ஒரு வீரரை ஏலத்தில் எடுத்த பிறகு, அந்த வீரர் காயமடைந்தாலோ அல்லது அவராகவே விலகினாலோ ஒழிய, பிரான்சைஸ் அணியால் அவரைத் தன்னிச்சையாக நீக்க முடியாது. ஒரு வீரர் விளையாடத் தயாராக இருக்கும் நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டுமானால் பிசிசிஐ-யின் தலையீடு மற்றும் அனுமதி அவசியம்’ போன்ற காரணங்களால் கேகேஆர் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்காமல் இருந்தது. தற்போது பிசிசிஐ அறிவுறுத்தலின்படி அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ உத்தரவின் பேரில் வீரரை நீக்கும்போது மட்டுமே, அந்த அணிக்கு வேறொரு மாற்று வீரரை தேர்வு செய்யும் உரிமை கிடைக்கும். இப்போது பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதால், கேகேஆர் அணி முஸ்தபிசுருக்கு பதில் வேறு ஒரு வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.
முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்கப்பட்டதையடுத்து கேகேஆர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “”வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக, அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு ஐபிஎல் அமைப்பின் ஒழுங்குமுறை அமைப்பான பிசிசிஐ/ஐபிஎல் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அறிவுறுத்தலின் பேரில், முறையான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி, முஸ்தபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக ஒரு மாற்று வீரரைத் தேர்வு செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிசிசிஐ அனுமதிக்கும். இது குறித்த கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்தபிசுர் ரஹ்மானின் நீக்கம் ஐபிஎல் தொடரில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் சூழலிலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க வங்கதேச அணி இந்தியா வருமா? அல்லது பாகிஸ்தான் அணியைப் போல அவர்கள் வேறு ஒரு நாட்டில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
