கோவை, ஜன. 3: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் – டூ படிக்கும் 1,767 மாணவர்களும், 10ம் வகுப்பு படிக்கும் 1895 மாணவர்களும் படிக்கின்றனர். வருகிற மார்ச் மாதம் இவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் சிறப்பு வகுப்பு துவங்க உள்ளது.
மாணவர்களுக்கு மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து மாலை நேர சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை 2025 – 2026 கல்வியாண்டில் 50 நாட்களுக்கு வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு விதமான மெனு கார்டு தயாரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஒரு மாணவனுக்கு வழங்கும் சிற்றுண்டி செலவு ரூ. 30, ரூ.29.50, ரூ. 28 என 3 விலைப்பட்டியல்களில் 3 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன. இதில் ரூ.28க்கு சிற்றுண்டி வழங்க உறுதியளித்த நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. விரைவில் ஜாப் ஆர்டர் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
