குன்னூர்,ஜன.3: நீலகிரி மாவட்டம் குன்னூர் – கோத்தகிரி சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஹித் (37) குன்னூர் செல்வதற்காக கோத்தகிரி சாலையில் தனது காரில் வந்தார். அப்போது, ஹைபீல்டு அருகே பட்டு பூச்சி வளர்ப்பு பண்ணை வளாக அருகில் சென்ற போது அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவற்றை தாண்டி,பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், காரை ஓட்டி வந்த ரோஹித் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்த குன்னூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ரோஹித் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
