×

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் துப்பாக்கி முனையில் கைது

காரைக்கால்: காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜாவுக்கு (39) சொந்தமான விசைப்படகில் அவரும், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜான்சினா (18), சந்திரநாத் (35), செல்வமணி (58), முருகன் (34),பிரதீப் (39), சக்திவேல் (34), ரஞ்சித் (37), வேலாயுதம் (50), மதியழகன் (43), மோகன்ராஜ் (51) ஆகியோரும் நேற்றுமுன்தினம் அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்திய கடற்பரப்பில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் நேற்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 11 பேரையும் இலங்கை காங்கேசன் துறைமுக கடற்கரை முகாமுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் 28ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்கள், 30ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Karaikal ,Raja ,Keezhakasakudimedu ,Jansina ,Chandranath ,Selvamani ,Murugan ,Pradeep ,Sakthivel ,Ranjith ,Velayudham ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...