புழல்: சோழவரம் அடுத்து ஜனப்பசத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் திசையில் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில், சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக மோட்டர் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்து எழுந்து, படுகாயத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், சர்வீஸ் சாலையில் மின்சார கம்பங்கள் இல்லாததால், இரவு நேரங்களில் இருட்டு சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் சாலையில் தடுமாறி மெதுவாக செல்லும்போது வழிப்பறி திருட்டு மற்றும் பாலியல் தொல்லைகள் நடக்க வாய்ப்பு உள்ளது.எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சர்வீஸ் சாலையை சரிசெய்து, மின் விளக்குகள் அமைத்து தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல், புழல் மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கிச்செல்லும் சிறைச்சாலை சிக்னல் அருகில் செல்லும் சர்வீஸ் சாலை சமீபத்தில் பெய்த மழையால், சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்க வைத்துள்ளனர்.
